அமெரிக்காவை அதிரவைத்த பேருந்து புறக்கணிப்பு போராட்டம்! 70 ஆண்டுகள் கடந்தும் கவனம்பெறும் `டிசம்பர் 5’
பேருந்துகள் என்பது வெறும் போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல. நவீன சமுதாயத்தின் கட்டமைப்பு. பேருந்துகள் என்பவை பலரது வாழ்வாதாரத்திற்கான கடத்து சங்கிலி, சாமானிய மக்களை வாழ்வின் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் இயங்கு சாதனம், விளிம்புநிலை மக்களை சமூக கட்டமைப்பிலிருந்து விடுவிக்கும் விடுதலை களம். 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், விஞ்ஞான வளர்ச்சியில் விண்வெளிக்கே ஏவுகணை ஏவும் இந்த காலகட்டத்தில், சாலை வசதி கேட்டும் , பேருந்து வசதி கேட்டும் அதிகார மையங்களில் மனு அளித்து போராடும் நிலைதான் இருக்கிறது என்பது மறுக்க முடியாதது. இன்றைக்கும் கிராமங்களில் பேருந்துக்கான போராட்டம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. 2021ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் பொடியன்குளம் கிராமத்திற்கென பேருந்து நிறுத்தமே இல்லாத நிலையில், மாற்று சாதியினர் வசிக்கும் பக்கத்து கிராமத்தில் சென்றுதான் பேருந்தைப் பிடிக்க வேண்டிய காட்சி நினைவிருக்கும். இத்திரைப்படத்தில் வரும் பேருந்துக்கான போராட்டம் என்பது ஒடுக்கப்பட்டோருக்கான சமத்துவ உரிமையை கோருகிறது. இந்த நிலை பல கிராமங்களில் இன்றும் நிலவும் சூழலில், உலகின் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமெரி நகரில் 70 ஆண்டுகளுக்கு முன்பு நிற பாகுபாட்டால், வெள்ளையினத்தவர் அமர வேண்டும் என்பதற்காக ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு ஒதுக்கப்பட்ட பேருந்து இருக்கையிலிருந்து எழ மறுத்த பெண்ணின் செயல், அடுத்த ஓராண்டு, அமெரிக்காவில் புரட்சிக்கான கனலை பற்ற வைத்தது. என்ன நிகழ்ந்தது? அன்றைய அமெரிக்காவில் பேருந்துகளில் வெள்ளை இனத்தவருக்கு என முன்பக்கங்களில் இருக்கையும் பின்புறத்தில் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு இருக்கையும் ஒதுக்கப்பட்டிருக்கும். டிசம்பர் 1,1955 அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமெரி என்ற நகரில் பேருந்து ஒன்றில் வெள்ளை இனத்தவர்க்கான இருக்கை முழுவதுமாக நிரம்பிவிட்ட நிலையில் ,வெள்ளை இனத்தவர்க்காக ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்த ரோசா பார்க்ஸை ஏழ பேருந்து ஓட்டுனர் கேட்டுக்கொண்டார். ஆனால் இதை கேட்க மறுத்த ரோசா பார்க், பயணத்திற்காக டிக்கெட் எடுத்துள்ளேன். இது எனக்கான இருக்கை, நான் எழமாட்டேன் என்று உறுதிப்பட கூறினார். இதனால் கோபமுற்ற பேருந்து ஓட்டுநர் காவலர்களை அழைத்து விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தினார். காவல்துறையோ சட்டப்படி நடக்காமல் அவருக்கு அபராத தொகை விதித்து கைது செய்தனர். இந்த நிகழ்வு அமெரிக்காவில் பெரும் புரட்சி தீயை பற்ற வைத்தது. மாண்ட்கோமெரியில் 70% பேருந்துகளை பயன்படுத்துவோர் ஆப்ரிக்க அமெரிக்க மக்கள். இந்த நிகழ்வால் பேருந்துகளை புறக்கணிக்க முடிவு செய்தனர். டாக்ஸிகளில் பயணம் செய்ய தொடங்கினர் . பணம் இல்லாதவர்கள் நடக்கத் தொடங்கினர். பேருந்தில் சென்று படிக்கும் நிலையில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் விடுதலைப் போராளி மாட்டின் லூதர் கிங் தலைமையில் இந்த போராட்டம் அமெரிக்கா முழுவதும் பரவியது. மேடைப் பேச்சுகள், துண்டறிக்கைகள் எனப் போராட்டங்கள் வேகமெடுத்தன. இந்த முடிவால் பேருந்து நிறுவனங்கள் நட்டத்தில் நடை போடத் தொடங்கின. ரோசா பார்க்ஸ் மீதான வழக்கு விசாரணையால் வேலை பறிபோனது. பொது இடங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு உரிய மரியாதையோடு இருக்கைகள் வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதி காட்டினார். டிசம்பர் 5, 1955 ல் தொடங்கிய பேருந்து புறக்கணிப்பு டிசம்பர் 20,1956 வரை,13 மாதங்கள், அதாவது 381 நாட்கள் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆப்ரிக்க அமெரிக்க மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. பேருந்துகளில் இரு வேறு பிரிவுகளுக்கு தனித்தனியாக இருக்கை இருப்பது சட்டப்படி குற்றம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மனிதன் எந்த நிறத்தில் இருப்பினும் சக மனிதரை மனிதர் மதிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமையை நிலைநாட்ட ரோசா பார்க்ஸ் தனது இருக்கையை தர மறுத்து போராடியது அமெரிக்க வரலாற்றில் ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் போராட்டத்தின் மைல்கல்.!
``இந்த ஆடையை உங்க மனைவிகிட்ட கொடுங்க, அவங்களுக்கு தெரியும்'' - சர்ச்சையை கிளப்பிய ஆடை நிறுவனம்
சீனாவைச் சேர்ந்த பிரபல ஆண்கள் ஆடை நிறுவனம் ஒன்று, தங்கள் தயாரிப்பில் இடம்பெற்ற வாசகத்திற்காக கடும் விமர்சனத்திற்குப் பாயப்பட்டுள்ளது. துணி துவைப்பது பெண்களுக்கான வேலை என்ற தொனியில் அந்த நிறுவனம் கூறிய வாசகம், இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ‘கு ஜுவோ காங் ஜெங்’ (Gu Zhuo Kang Zheng) என்ற ஆடை நிறுவனம், ஆண்கள் அணியும் ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் கோட்டில் இருந்த குறிப்பு தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த ஆடையின் பின்புறத்தில் இருந்த லேபிளில், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் தயவுசெய்து இதை உங்கள் அன்புக்குரிய பெண்ணிடம் கொடுங்கள், அவருக்கு எல்லாம் தெரியும் என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆடையை எப்படித் துவைக்க வேண்டும், எந்திரத்தில் துவைக்கலாமா அல்லது கையில் துவைக்கலாமா என்ற எந்த தொழில்நுட்ப வழிகாட்டுதலும் அதில் இல்லை. அதற்கு பதிலாக, பெண்ணிடம் கொடுத்துவிடுங்கள், அவர் பார்த்துக்கொள்வார் என்ற தொனியில் குறிப்பிட்டிருந்தது. இந்த ஆடையை வாங்கிய இணையவாசி ஒருவர், அந்த லேபிளின் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவுடன் இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்துள்ளது. பலரும் அந்த நிறுவனத்தின் செயலைக் கடுமையாக விமர்சித்தனர். இந்த விவகாரம் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆடை நிறுவனம் பொதுமன்னிப்பு கோரியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
`ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி' - குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிப்பதற்காக ஆணுறைகள் மற்றும் பிற கருத்தடைப் பொருட்களின் விலையை உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளாக வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் போன்றவை, அண்மையில் அறிவிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு வரிச் (Value-added Tax - VAT) சட்டத்தின் கீழ், வரி விலக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதிகரிக்கும் பாலியல் நோய்கள் சீன அரசு 'ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை' என்ற கொள்கையை வலியுறுத்தி வந்தபோது இந்த வரி விலக்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தற்போது ஒரு ஆணுறை $0.60 (இந்திய மதிப்பில் சுமார் 50 ரூபாய்) என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. இது ஆஸ்திரேலியாவின் சில்லறை விலையில் பாதியாகும். ஆனால் வரி விதிப்புக்குப்பிறகு இந்த நிலை எப்படியாக மாறும் எனக் கூற முடியாது. தற்போதைய தகவல்கள் படி 13% வரிவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Chinese Students இந்த வரி விதிப்பு, பெண்கள், இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ஒரு பின்னடைவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், இது பாலின சமத்துவத்தைப் புறக்கணிப்பதோடு, கருத்தடை மிகவும் தேவைப்படுவோருக்குக் கிடைப்பதை மேலும் கடினமாக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் நோக்கில், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களுக்கு கருத்தடைப் பொருட்களைக் கிடைக்கும்படி வைத்திருப்பது மிகவும் முக்கியம். சில நாடுகள் இளைஞர்களுக்கு ஆணுறைகளை இலவசமாகக் கூட கொடுக்கும் இடத்துக்கு நகர்ந்துள்ளன. ஆனால், இதற்கு வரி விதிப்பது, ஆணுறை கிடைப்பதை தடுப்பதோடு, நோய்த்தொற்று தடுப்பு முயற்சிகளையும் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் வெளியான ஓர் ஆய்வு, சீனாவில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பும், இறப்பு விகிதமும் சமீபத்திய ஆண்டுகளில் உயர்ந்து வருவதைக் காட்டுவது குறிப்பிடத்தக்கது. சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசின் மக்கள்தொகை கொள்கை மக்களைப் பற்றியது அல்ல தற்போது பிறப்பு விகிதம், 'மக்கள்தொகைக் கட்டுப்பாடு' என்ற நிலையில் இருந்து 'கருவுறுதலை ஊக்குவித்தல்' என்ற நிலைக்கு சீனா மாறியுள்ளது. சீனாவின் கடுமையான 'ஒரு குழந்தை கொள்கை' ஒரு தசாப்தத்திற்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. 2016-ல் 'இரண்டு குழந்தை கொள்கை' எனவும், பின்னர் 2021-ல் 'மூன்று குழந்தை கொள்கை' என்றும் அது மாற்றப்பட்டது. கருத்தடைப் பொருட்கள் வரி விலக்கை இழந்த நிலையில், திருமணத் தகவல் மையங்கள் இப்போது புதிதாக வரி விலக்கு அளிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. சீன அரசு ஊடகங்கள், பெண்கள் பல்கலைக்கழகப் படிப்புக் காலத்திலேயே திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்து வருகின்றன. இது பெண்களின் கல்வி மற்றும் தொழில் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் என்று அமைப்புகள் எச்சரிக்கை விடுக்கின்றன. இந்த புதிய வரி விதிப்பு ஒரு பொருளாதாரச் திருத்தம் மட்டுமல்ல, குடும்பம், திருமணம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை அரசு அணுகும் விதத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய அரசியல் மாற்றம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். Chinese Pregnant Woman சீனாவின் அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் படித்துக்கொண்டே பெற்றோருக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றியும், வளாகத்தில் குழந்தைகளைப் பெறுவதன் சமூக நன்மைகளைப் பற்றியும் செய்தி வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன. குறைந்த வயதிலேயே திருமணம் மற்றும் பெற்றோருக்குரிய அழுத்தம், எதிர்காலத்தில் பெண்களின் கல்வி முடிவுகளை எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்விகளை இது எழுப்புகிறது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறைந்த வயது பெற்றோர்களை உருவாக்குவது இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான சரியான வழியாக இருக்க முடியாது எனக் கருதுகின்றனர். சீனாவின் மக்கள் தொகை கொள்கை ஒருபோதும் மக்களைப் பற்றியது அல்ல. ஆனால் இந்தமுறை சீன அரசின் செயல்பாடுகள் மக்கள் தொகையை அதிகரிப்பதை நோக்கி இருக்கிறதா அல்லது பெண்களை குழந்தை பெற்றெடுக்கும் 'வளமாக' மாற்றுகிறதா என்ற கேள்வி சீன இளைஞர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சீனா: இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம் - சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு!
UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக்குறை ஐநா சபை
ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டின் முடிவில், ஐநா சபைக்கு 760 மில்லியன் அமெரிக்க டாலர் நிலுவைத் தொகையாக உள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டுக்கான 877 மில்லியன் அமெரிக்க டாலரும் செலுத்தப்படாமல் இருப்பதால், மொத்த நிலுவைத் தொகை சுமார் 1.586 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஐநா ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் வெறும் 145 நாடுகள் மட்டுமே 2025ஆம் ஆண்டுக்கான தங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலுவைக் காரணமாக, ஐ.நா. தனது வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான குறைப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பட்ஜெட் குறைப்பு மற்றும் அதன் தாக்கங்கள் ஏற்கெனவே UN80 சீர்திருத்த முயற்சியின் கீழ் ஐ.நா. சபை செலவினங்களைக் குறைக்க முயலும் சூழலில், பெரும்பாலான பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தடைபடுவதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்புகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்துமாறு நான் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று வருந்தியுள்ளார். ஐநா சபை திருத்தப்பட்ட திட்டத்தின்படி, 2026ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் வழக்கமான பட்ஜெட் 3.238 பில்லியன் டாலராக இருக்கும். இது 2025 உடன் ஒப்பிடும்போது 577 மில்லியன் டாலர் (சுமார் 5,200 கோடி ரூபாய்) அல்லது 15.1% குறைவாகும். வேலை இழப்புகள் மற்றும் பணிகளில் தாக்கம் இந்த நிதி நெருக்கடியின் காரணமாக 2,681 வேலைகள் நீக்கப்படும். இது ஐ.நா. அதிகாரிகளில் சுமார் 18.8% ஆகும். சிறப்பு அரசியல் பணிகளில் 2025 உடன் ஒப்பிடுகையில் 21% குறைப்பு மேற்கொள்ளப்படும். இதன் விளைவாக, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடுகளில் ஐ.நா.வின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐ.நா.வின் முக்கிய நிலையங்களைச் செலவு குறைவான நகரங்களுக்கு மாற்றுவது, ஊழியர்களின் விருப்ப ஓய்வை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்த ஐ.நா. திட்டமிட்டுள்ளது. Gaza: ``உலகின் மௌனம் அச்சுறுத்துகிறது'' -இஸ்ரேலை எதிர்த்து காசாவுக்கு உதவ முயலும் கிரேட்டா தன்பெர்க்
Napoleon: ''அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது''- மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. நெப்போலியன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய 'ஜீவன் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கவிருக்கிறாராம். அந்தத் திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை 'ஜீவன் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர். அதற்கான கதைத் தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன். View this post on Instagram A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy) எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் அதிக பொருட்செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்திருக்கிறார்.

24 C